புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!

நம்முடைய பரலோகப்பிதாவும், இரட்சகரும், மகிமையின் நம்பிக்கையுமாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற, ஒரே, உன்னத நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!

“உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்”      – எபிரெயர் 6:12

சகல நம்பிக்கையின் தேவனை கருத்தில் கொள்ளாதோரே நம்பிக்கையற்ற ஜனமாய் இருக்கிறார்கள் (ரோமர்.15.13). ஆனால் மீட்கப்பட்டோர் எப்போதும் அவரில் நம்பிக்கையுள்ளவராய் இருப்பதனால், ஒருக்காலும் நம்பிக்கையற்றவராய் இருப்பதில்லை. அவர்களுடைய சூழ்நிலை எவ்வளவாக மாறுபட்டு இருந்தாலும் முடிவுபரியந்தம் தங்கள் நம்பிக்கையில் ஜாக்கிரதையாய் இருப்பார்கள்.

இந்நிலையற்ற உலகத்தில் நாம் எவ்விதமான காரியங்களை எதிர்கொண்டாலும், மீட்கப்பட்டோராய் நம்முடைய நம்பிக்கையில் பூரண நிச்சயம் உண்டாகும்படி முடிவுபரியந்தம் ஜாக்கிரதையாய் இருப்போமாக. தேவனுடைய தவறாத வார்த்தையிலிருக்கும் இந்த ஆச்சரியமான வாக்குத்தத்தத்தைக் கொண்டு ஆசீர்வாதமான 2024-ம் புத்தாண்டின் வாழ்த்துக்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களின் எல்லா சவாலான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவகிருபையும், இரக்கமும், உண்மையும், வியக்கத்தக்கதாய் இருக்கிறது. கடந்த ஆண்டில் தேவ நாம மகிமைக்காக அவருடைய அழைப்பையும், திட்டத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும்படி, அவருடைய ராஜ்யத்தில் பிரயாசப்பட, அவர் அளித்த சகல வாய்ப்புக்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம். இத்தருணத்தில் எங்களுக்காகவும் தேவன் எங்கள் கைகளில் அருளிய அவருடைய ஊழியத்திற்காகவும் நீங்கள் ஏறெடுத்த ஊக்கமான ஜெபத்திற்காகவும் காண்பித்த ஆதரவிற்காகவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நம் மீட்பு சமீபமாய் இருக்கும் இவ்வேளையில் நம்பிக்கையின் பூரண நிச்சயத்தோடு தலைநிமிர்ந்து அவரை நோக்குவோமாக.

தேவகிருபையும், சமாதானமும், நம்மனைவரோடும் கூட இருப்பதாக!

அவருடைய ஊழியப் பணியில்,

டேவிஸ் குடும்பம்,

திருக்கழுக்குன்றம்,

தமிழ்நாடு, இந்தியா.