சிந்தனை செய்து உறுதி செய்து கொள்வோம் …

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு,

இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு துதியும், கணமும், மகிமையும் உண்டாவதாக. முழு உலகமும் பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வேளையில் நாமும் வாழ்க்கையின் அனுதின பரபரப்பிலிருந்து சற்று விடுபட்டு இருக்கும் தருவாயில் நம் தனிப்பட்ட வாழ்க்கையைக்குறித்து சிந்தனை செய்து, கீழ்க்காணும் மூன்று காரியங்களை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.

1. நான், என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறேனா. (1 பேதுரு 1:23)

2. என் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதி செய்து அதற்கேற்றார்போல் வாழ்கிறேனா. (2 பேதுரு 1:10; கொலோ 3:12-14)

3. யாத் 12:13-ல் “… அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; …” என கூறுகிற வாக்குத்தத்தத்தைப் போல் வேத வசனங்களில் கூறப்பட்டிருக்கிற தேவனுடைய மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கிறேனா. (2 பேதுரு 1:4)

சுகாதாரத்தையும், அதிகாரத்தின் வழிகாட்டுதலையும் கடைபிடிக்கும் அதே வேளையில், தேவனுடைய ஜனமாய் இக்காரியங்களைக்குறித்து, குறிப்பாக இக்கால சூழ்நிலைகளில் சிந்தனை செய்து, அதில் உறுதியாயிருப்பது மிகவுமவசியம்.

2 தீமோ 2:19 கூறுவதாவது, “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.”.

யோவான் 10:14,15 கூறுவதாவது, “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.”.

யோவான் 10:27 கூறுவதாவது, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”

நாம் ஆண்டவருடையவர்களாயும், அவர் நம்முடையவராயும் இருக்கும் நிலையில், எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ அவசியமில்லை. ஏனெனில் அவருடைய இரத்த கோட்டையின் குறைவற்ற பாதுகாப்பில் நாம் இருக்கிறோம்.

கிறிஸ்து இயேசுவின் அன்பும், கிருபையும், சமாதானமும், பாதுகாப்பும் நம்மனைவரோடும் தொடர்ந்து இருப்பதாக.

ஜெபத்துடன்,

சகோ. ஜேமி டேவிஸ்.

முகவரி : இம்மானுவேல் ஜெப வீடு, 93 A, சட்ராஸ் சாலை, திருக்கழுக்குன்றம் – 603109. செங்கல்பட்டு மாவட்டம். தமிழ் நாடு, இந்தியா

இ மெயில்: jfdavis@live.com